திருப்பூர் கூட்டுறவு அங்காடியில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை

வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வீடுகளில் பலகாரங்கள் மற்றும் உணவுத் தயாரிப்புகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உணவில் அத்தியாவசியப் பொருளாக இருப்பவை சிறிய மற்றும் பெரிய வெங்காயம். தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது சந்தைகளில் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றதால், அங்கிருந்து வெங்காயம் அனுப்ப முடியாததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய உச்சபட்ச விலை உயர்வால், குடும்பங்களில் இருப்போர் வெங்காயம் வாங்கவே சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.45-க்குவிற்கப்படுகிறது. பெண்கள் வரிசையில் நின்று அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக குடும்பத் தலைவி ஒருவர் கூறும்போது, "சந்தைகளில் கிலோ ரூ.100-க்கு பெரிய வெங்காயம் விற்பதால்,கூட்டுறவு அங்காடிகளில் வாங்குகிறோம். இங்கு வாங்கப்படும் வெங்காயத்தில் பாதி அளவு கெட்டு போயிருப்பதால், மீதம் உள்ளதை மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டுறவு அங்காடிகளில் விலை குறைவு எனும் சூழ்நிலையில் தான் வாங்குகிறோம். பண்டிகை நேரம் என்பதால் வெங்காயத்துக்கு மட்டும் ஒரு பெரும் தொகை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கவே கூட்டுறவு அங்காடிகளை நாடுகிறோம். இந்நிலையில், இங்கு அழுகியவெங்காயங்களை அப்புறப்படுத்தி விட்டு விற்றால் அனைவரும் பயன்பெறுவர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்