திண்டுக்கல்லில் நேற்று பகலில் அவ்வப்போது பெய்த மழையால், தற்காலிகமாக சாலையோரம் கடை அமைத்திருந்த சிறு வியாபாரிகள் சிரமப்பட்டனர்.
திண்டுக்கல் நகரில் கடந்த இருநாட்களாக தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது. நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க திண்டுக்கல் நகருக்கு வந்து செல்வது அதிகம் காணப்பட்டது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சிறுவியாபாரிகள் சாலையோரம் கடைகள் அமைத்து பல்வேறு பொருட்களை விற்றனர். நேற்று முன்தினம் விற்பனை சுமாராக இருந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான நேற்று விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்தனர். அதற்கேற்ப காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டம் சிறிது நேரம் களைந்தது. பின்னர் மீண்டும் 3.30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் தீபாவளி கடைசிக் கட்ட விற்பனையை நம்பியிருந்த சாலையோர வியாபாரிகள், தாங்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களைப் பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டனர். மழையால் விற்பனையும் சிறிது பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago