திருப்பூர் - காங்கயம் சாலை ராக்கியாபாளையம் ஜெய் நகரைச் சேர்ந்தவர் வி.இதயசந்திரன். இவர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "திருப்பூர் மண்ணரை ஊத்துக்குளி சாலை சத்யா காலனியைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்குமார் (40). இவர், எஸ்.எஸ்.எம். சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் உரிய அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் மண்ணரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சீட்டுக்கு சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். நான் உட்பட பலர் செலுத்திய சீட்டு தொகை ரூ.84 லட்சம் வரை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். தலைமறைவான அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், வழக்கு பதிவு செய்த மாநகர மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன், ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீஸார், நேற்று காலை மண்ணரை பேருந்து நிறுத்தம் அருகே ராஜ்குமாரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘ராஜ்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து அதற்கான குறிப்பிட்ட தொகையை செலுத்த உத்தரவிட்டது. அதை செலுத்தாததால் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி ராஜ்குமாரை கைது செய்துள்ளோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago