வாலாஜாபாத் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு தொற்று நோய் பரவும் அபாயம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்தப் பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது வாலாஜாபாத் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியில் போஜக்கார தெரு, பங்களா தெரு, நடேச அய்யர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் அப்படியே தேங்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, இரவு நேரங்களில் பொதுமக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். மேலும் தூர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இந்த தெருக்களின் அருகிலேயே காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளதால் இப்பகுதி வழியே பொதுமக்கள் தினந்தோறும் அதிகம் பயணிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், அடைப்புகளை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்