விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் தென்காசி, குமரி ஆட்சியர்கள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், குமரி மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளித் திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால், குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலி, குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள்,குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து விபத்தில்லாத, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்