நெல்லையில் இடியுடன் பரவலாக மழை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, பாளையங் கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அணை பகுதி களிலும், பிற இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், திருநெல்வேலி மாநகரில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வள்ளியூரில் சாரல் மழை பெய்தது. அதேநேரத்தில் அதற்கு தெற்கு பகுதியில் மழை பெய்யவில்லை.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 98.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 473.80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,363.50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. அணைக்கு 119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

சேர்வலாறு அணையில் 91.24 அடியாகவும், வடக்கு பச்சையாறில் 10.25 அடியாகவும், நம்பியாறு அணையில் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 34 அடியாகவும் நீர்மட்டம் இருந்தது. கொடுமுடியாறு அணைக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டையில் 20 மிமீ

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அம்பாசமுத்திரம்- 10, சேரன்மகாதேவி- 15, நாங்குநேரி- 6.50, பாளையங்கோட்டை- 20, ராதாபுரம்- 2.20, திருநெல்வேலி- 9

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாட்களாக மழை நின்று வெயில் அடித்தது.

நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து பரவலாக சாரல் மழை பொழிந்தது.

கும்பப்பூ சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு 551 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. நீர்மட்டம் 43.28 அடியாக உள்ளது. 727 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையில் 69.25 அடி உள்ளது. 154 கனஅடி தண்ணீர் வருகிறது. 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்