வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், தீபாவளி பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி மற்றும் வள்ளலார் பகுதியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, தீபாவளியை முன்னிட்டு தொழிற் சாலை நிர்வாகங்கள் தரப்பில் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெறுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வேலூர் டிஎஸ்பி லட்சுமிகாந்தன் தலைமையிலான குழுவினர் வள்ளலார் பகுதியில் உள்ள துணை இயக்குநர் 2-ம் வட்டம் மற்றும் சத்துவாச்சாரியில் உள்ள துணை இயக்குநர் முதலாவது வட்ட அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டு, கட்டாக பணம் மற்றும் தீபாவளி இனிப்புகள், ஏராளமான பட்டாசு பெட்டிகள், பழங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் துணை இயக்குநர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மலையில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்
திருவண்ணாமலை காந்தி நகரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. துணை இயக்குநராக நஜீமா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் தீவிரம் காட்டியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் லட்சுமிகாந்தன் தலைமையில் ஆய்வாளர்கள் அருண்பிரசாத் மற்றும் மைதிலி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பணியில் இருந்த ஊழியர்களை வெளியே செல்லாமல் தடுத்தனர்.மேலும், அவர்களது செல்போன் களை அணைத்து வைத்தனர். இதையடுத்து, அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது, பதிவறை உட்பட பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago