திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடம் கட்ட அடிக்கல்

திருப்பூர் தாராபுரம் சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறையின் சார்பில் ரூ. 48 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் முன்னிலையில், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த சேவை மையம் தொடர்பாக, சமூக நலத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்டு, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இதில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தொழில் நுட்ப பணியாளர், களப் பணியாளர் உதவியாளர் மற்றும் காவலர் என 7 பேர் தொகுப்பூதிய ஒப்பந்தமுறையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் மொத்தம் 343 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறை வழக்குகள் 168 விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. 50 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சேவை தேவைப்படும் பெண்கள், ஒருங்கிணைந்த சேவை மையத்தை 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிரந்தரக் கட்டிடம் கட்டும் வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் மருத்துவ ஆலோசனை அறை, சட்ட ஆலோசனை அறை, வார்டு அறை, சமையலறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, அரசு மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பாக்கிய லட்சுமி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்