மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

பாரூர் அருகே மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த தாமோதரஅள்ளி அருகே உள்ள குண்ணிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவபிரகாசம் (31). இவரது மனைவி முருகம்மாள் (23). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முருகம்மாள், தனது பெற்றோர் வசிக்கும் வடமலைப்பட்டி கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி, வடமலைப்பட்டிக்கு சென்ற சிவபிரகாசம், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட முருகம்மாளின் தாயார் எல்லம்மாள் தடுக்க முயன்றார். அப்போது, ஆத்திரமடைந்த சிவபிரகாசம், அருகில் இருந்த கொடுவாளை எடுத்து எல்லம்மாவின் தலையில் அடித்தார். இதில் மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அதே ஆண்டில் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார். இதுதொடர்பாக பாரூர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து, சிவபிரகாசத்தை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மாமியாரை கொலை செய்த குற்றத்துக்காக, சிவபிரகாசத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்