நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று அதிகாலையில் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உள்பிரகார வலம் நடைபெற்று வருகிறது. விழாவின் 11-ம் நாளான நேற்று முன்தினம் டவுன் கம்பாநதி காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள காட்சி மண்டபத்தில் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று அதிகாலையில் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி சந்நிதியில் நெல்லையப்பருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி நெல்லையப்பர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பாதபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருக்கோயில் செயல் அலுவலர் ராம்ராஜ் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர். கோயில் இணையதளம் மூலம் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். காலை 6 மணிக்கு பின் கோயிலுக்குள் சுவாமி, அம்பாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அதிமுக, மதிமுக, இந்து முன்னணி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா

தென்காசியில் உள்ள உலகம்மன் உடனாய காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக விழா நாட்களில் உற்சவர் வீதியுலா நடத்தாமல் கோயிலுக்குள்ளேயே தினமும் உற்சவர் புறப்பாடு நடத்தப்படுகிறது.

கோயிலுக்குள் அமைந்துள்ள ராஜகோபுரத்தை அடுத்துள்ள புல்வெளியில் அம்பாள் தபசுக் காட்சி நேற்று நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தபசு இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இன்று ஊஞ்சல் நிகழ்ச்சி கோயிலுக்குள் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்