திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால், சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின் றனர். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், கடந்த மாதம் 23-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவின்படி தமிழகத் தில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைந்த ஒலியும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப் பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago