பாம்பனில் கடல் சீற்றத்தால் ரயில் பாலத்தில் தொடர்ந்து மோதும் மிதவைகள் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தம்

By எஸ். முஹம்மது ராஃபி

பாம்பனில் புதிய ரயில் பாலப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மிதவைகள் கடல் சீற்றத்தால் பழைய ரயில் பாலம் மீது தொடர்ந்து மோதி வருகின்றன. இதனால் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது பாம்பன் கடல் மீது 1914-ம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டது. 106 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இப்பாலத்தில் ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூக்குப் பாலம் சில ஆண்டுகளாக வலுவிழந்துள்ளது.

இதனால் பாம்பன் கடல் மீது தற்போதுள்ள பாலத்துக்கு அருகே ரூ.250 கோடி மதிப்பில் இரட்டைப் பாதையுடன் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இப்பணி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட பணி மீண்டும் நடைபெறுகிறது. பழைய பாலத்துக்கு அருகிலேயே கடலில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை இயந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. இதனால் பாம்பன் வடக்குக் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. இப்பகுதியில் நடைபெறும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மிதவைகள் காற்றின் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போதுள்ள ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும், மிதவைகள் மூழ்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடல் சீற்றத்தால் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து கட்டுமானப் பணிகளில் ஈடு படுத்தப்பட்ட கிரேன், கலவை இயந்திரம், துளைப்பான்களுடன் கூடிய மிதவைகள் பாம்பன் வடகடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கிரேன் ஒன்று திங்கட்கிழமை இரவு கடல் சீற்றத்தால் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களுக்கு இடையில் சிக்கியது.

இதனால் திங்கட்கிழமை ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு 210 பயணிகளுடன் புறப்பட்ட சேது விரைவு ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்