கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டு 64-ம் ஆண்டு தொடக்கம் உபரிநீரால் 2 ஆயிரம் ஏரிகள், குளங்களை நிரப்ப வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணை திறக்கப்பட்டு 64-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் உபரி நீரால் 2 ஆயிரம் ஏரிகள், குட்டைகள், குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரியமுத்தூர் என்னுமிடத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் கிருஷ்ணகிரி அணை கட்டும் பணியை கடந்த 1955-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி வைத்தார். அணை ரூ.1.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, 1957-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி காமராஜர் அணையைத் திறந்து வைத்தார். அணை திறந்து நேற்றுடன்(10-ம் தேதி) 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64-ம் ஆண்டு தொடங்கி உள்ளது. இந்நிலையில் அணையில் நீர்ப்பாசன திட்டங்கள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுறக் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறும்போது, ‘‘அணை நீரின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. உபரி நீர் இணைப்புக் கால்வாய்கள் நீட்டிக்கப்பட்டு ஏரி களுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், மழைக் காலங்களில் வரும் உபரி நீரை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏரிகள், குட்டைகள், குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘‘அணையில் உள்ள பூங்காவில், சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

கிருஷ்ணகிரி அணையில் மதகுகளை மாற்றியமைக்கும் பணி காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக 42 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை. புதிய மதகுகள் பொருத்தப்பட்ட பின்னர், அணையில் கூடுதல் நீர் தேக்கி வைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 395 கனஅடியாக உள்ளது. ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் 215 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்