அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 175 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மானியம்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் பணிக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 175 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மானியம் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெண்களுக்கு மானியத் தொகையை வழங்கி பேசியது: அம்மா இருசக்கர வாகன திட்டம் 2017-18-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டதில் கரூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) 175 பேருக்கு ரூ.43.75 லட்சம் மானியத் தொகையை விடு விக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3,652 மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை கேட்டு நவ.9-ம் தேதி விண்ணப்பித்த 3 பேருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இன்று உதவித்தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, கரூர் திருமா நிலையூரில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்து, ரூ.99.40 லட்சத்திலான 3 பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இணை இயக்குநர் வாணிஈஸ்வரி, கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணைத்தலைவர் முத்துகுமார், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்ட செயல் அலுவலர் க.இ.ஆரோன் ஜோஸ்வாரூஸ்வெல்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE