திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தலைவர் பி.பழனிசாமி, செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் ஆகிய 5 நகராட்சிகளில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேற்கண்ட ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆட்சியர் நிர்ணயித்து அறிவிக்கும் ஊதியத்தைவிட குறைத்து வழங்கப்படுகிறது. அத்துடன், தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் இபிஎஃப் தொகைகள், ஒப்பந்ததாரர் செலுத்திய தொகைகள் குறித்த விவரங்கள் முறையாக தெரிவிப்பதில்லை.
தூய்மைப் பணியாளர்களுக்கான நியாயமான போனஸ் வழங்கப்படுவதில்லை. அதாவது, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவுப்படி ரூ.510, ஓட்டுநர்களுக்கு ரூ.590, டிபிசி (கொசுப்புழு ஒழிப்பு) பணியாளர்களுக்கு ரூ.400 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎஃப் தொகைக்கும், நிர்வாகத்தின் பங்குத்தொகை செலுத்தியதற்கும் ஆவணம் வழங்க வேண்டும். காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகளில் மேஸ்திரிகளின் தவறான அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். மாதம் 10-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago