தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச்24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளும், கல்லூரி வகுப்புகளும் நவ.16 முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கரோனா 2-வது அலை உருவாகும் அபாயம் இருப்பதால் பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது அமைப்புகளை சேர்ந்தோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், பள்ளிகளை நவம்பர் 16-ல் திறக்கலாமா, வேண்டாமா என தமிழகம் முழுவதும் நேற்று காலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் ஆய்வு
‘நவ.16-ல் பள்ளிகளை திறக்கலாம், திறக்க சம்மதம் இல்லை’, ‘சம்மதம் இல்லை எனில் அதற்கான காரணம்’ ஆகியவற்றை பதிவிடும் வகையில் படிவம் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. அந்த படிவத்தை பூர்த்திசெய்து ஆசிரியர்களிடம் வழங்கினர்.தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக பள்ளிக்கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
சென்னையில் 659 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கருத்துக்கேட்புகூட்டத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனும், திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளி உட்பட 10 பள்ளிகளில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏ.அனிதாவும் ஆய்வு செய்தனர்.
அரசு இறுதி முடிவு
இவ்வாறு பள்ளி அளவில் பெறப்பட்டுள்ள பெற்றோரின் கருத்துகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பெற்று, மாவட்ட அளவிலான அறிக்கையாக தொகுத்து பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்புவார்கள். அதன் அடிப்படையில், வரும் 16-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கை, காஞ்சி, திருவள்ளூரில்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1,515 பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செங்கல்பட்டு ஆஞ்சிலோ இருதயசாமி, காஞ்சி சாமி சத்தியமூர்த்தி, திருவள்ளூர் வெற்றிச்செல்வி ஆகியோர்சார்பில் கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டுமென பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.
இதில் கலந்துகொண்ட 60 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்றும், 40 சதவீதம் பேர் திறக்கக் கூடாது என்றும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
பள்ளிகளை திறக்க 50 சதவீத பெற்றோர் ஆதரவு
சென்னை பள்ளிகளில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஒருசில பெற்றோர், “மாணவர்களின் படிப்புதான் முக்கியம். ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் முழுமையாக கலந்து கொள்வதில்லை. பள்ளிகளுக்கு நேரடியாக சென்றால்தான் அவர்கள் படிப்பார்கள். எனவே பள்ளிகளை திறக்கலாம்” என தெரிவித்திருந்தனர்.
வேறு சில பெற்றோர் "குழந்தைகளின் உயிர்தான் முக்கியம். பள்ளிகள் திறந்து குழந்தைகளுக்கு கரோனா பரவினால் அதற்கு யார் பொறுப்பேற்பது? கரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மழைக் காலமும் வந்துவிட்டது. எனவே, சில மாதங்கள் கழித்து பள்ளிகளை திறந்தால் படிப்பு ஒன்றும் ஆகிவிடாது. எனவே பள்ளிகளை திறக்கக்கூடாது" என்றனர். இதற்கிடையே, பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சமஅளவில் இருந்ததாக கருத்துக்கேட்பு கூட்ட களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago