பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

By செய்திப்பிரிவு

பயிர் காப்பீடு செய்தோருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஓரிவயல் விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஓரிவயல், பனைக்குளம் கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து ஓரிவயல் ஊராட்சித் தலைவர் டி.மலர்மதி, ஓரிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லம் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயி செல்லம் கூறியதாவது: 2018-19-ல் எங்கள் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்திருந்தோம். இதில் ஆன்லைன் மூலம் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து காப்பீடு நிறுவனத்திடம் கேட்டதற்கு, ஓரிவயல் வருவாய் கிராமத்தில் நெல் விளைந்து மகசூல் கிடைத்துவிட்டது. அதனால் இழப்பீடு இல்லை எனக் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என்று கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) தனுஷ்கோடி, கோபு(பொது), துணை ஆட்சியர் (குறைதீர்ப் பிரிவு) ஜெய்சங்கர், வேளாண்மை அலுவலர் சித்ரலேகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE