கிடப்பில் போடப்பட்ட தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்மாபேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
ஒன்றியப் பொருளாளர் பி.தாமரைச்செல்வி, நகரச் செயலாளர் கே.ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் செந்தில்குமார் கூறியாதவது:
தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக 2015-ம் ஆண்டு அறிவித்து விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதையடுத்து, நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். அதனடிப்படையில், இப்பணிக்கு 2020 பிப்ரவரி 27-ம் தேதி ரூ.340.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை சாலை சீரமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளதால், அம்மையப்பன், கொரடாச்சேரி, கோவில்வெண்ணி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், பூண்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, போர்க்கால அடிப்படையில் சாலையை தரமாக சீரமைக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago