கால்வாய் அடைப்பால் குடியிருப்புக்குள் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் கால்வாய் அடைப்பால் குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் புகுந்தது தொடர்பாக தகவல் அளித்தும், நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ரங்கநாதபுரத்தையும் வஞ்சிபாளையத்தையும் இணைக்கும் சாலையில் கழிவுநீர் செல்ல ஏதுவாகவும், வாகனங்கள் செல்ல வசதியாகவும் சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் செல்ல வழியின்றி, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அப்பகுதிக்கு வரவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ச. நந்தகோபால் தலைமையில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 15-வேலம்பாளையம் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து சென்ற மாநகராட்சியினர், பொக்லைன் உதவியுடன் பாலத்தை இடித்து, அடைப்பை சரிசெய்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலம் இடிக்கப்பட்டதால் வாகனங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மாற்றுப்பாதையில் செல்கின்றன.

நீண்ட நாட்களுக்கு இதே நிலை தொடர முடியாது. கார் போன்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வது சிரமமானது. எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை தரமான முறையில் சீரமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்