தீபாவளி பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழாக்கால தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
ஓசூர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் பணியாற்றுவோர் தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓசூரில் இருந்து திருப்பத்தூர், வேலூர், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஓசூர் பத்தலப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். மேற்கண்ட ஊர்களில் இருந்து ஓசூர் நகருக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும்.
ஓசூர் நகரில் இருந்து தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். பெங்களூரு நகரில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட இரு பேருந்து நிலையங்களுக்கும், தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் இருந்து தனித்தனியே நகரப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஓசூரில் இருந்து புறப்படும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் தளி சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
இந்த நடைமுறை, வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பின்பற்றப்படும். விழாக்காலத்தில் பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி, அரசு போக்குவரத்துக் கழக வணிகப் பிரிவு மேலாளர் ஜெய பால்(தருமபுரி), தமிழரசன்(ஓசூர்), அரவிந்தன்(கிருஷ்ணகிரி) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago