குடிமராமத்து பணிக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலைகள் மேம்பாட்டு பணிக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிகழாண்டு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 43 கண்மாய்களை ரூ.217 கோடியில் தூர் வாரும் பணி அந்தந்த கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கண்மாய்கள் தூர் வாரும் பணி முடிவுற்று 2 மாதங்களுக்கும் மேலாகியும், ஏற்கெனவே வழங்கியதுபோக மீதமுள்ள சுமார் 50 சதவீதத் தொகையை அரசு வழங்கவில்லை.

விவசாயிகள் சேர்ந்து பிற இடங்களில் கடன் வாங்கி பணி முடிக்கப்பட்ட நிலையில், அதற்கான தொகையை அரசு உரிய நேரத்துக்கு வழங்காததால் விவசாயிகள் வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி தொகையை விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்கட்டு தாரர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக ஏரி, கண்மாய்களும் அவற்றுக்கான வரத்து வாய்க்கால் களும் தூர்ந்து காணப்பட்டன. இவற்றை குடிமராமத்து திட்டத்தில் சீரமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை வைத்து பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்களே சொந்த செலவில் நீர்நிலைகளை மேம்படுத்தினோம். இதற்கான செலவில் 50 சதவீதத் தொகையை அரசு ஏற்கெனவே வழங்கிவிட்டது. ஆனால், மீதித் தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. பணி முடிந்து 2 மாதங்களுக்கும் மேலாகியும், தொகை வழங்காததால் வாங்கிய தொகைக்கு வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக முதல்வர் புதுக்கோட்டை வந்தபோது இதற்கு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பி இருந்தோம்.ஆனால், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே, அரசு விரைந்து நிதியை விடுவிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை பொறியாளர்கள் கூறிய போது, “குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப் பட்ட பணிகளுக்கு வழங்கப்பட வேண் டிய நிலுவைத் தொகை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்ததும் அந்த தொகை வழங்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்