கோழிப் பண்ணைகளில் வெங்காயம் பதுக்கல்; வேளாண் துறையினர் ஆய்வு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், குரும்பலூர், புதூர், மேலப்புலியூர், இரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளை வியா பாரிகள் வாடகைக்கு எடுத்து, பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் பாத்திமா, வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் சிங்காரம் மற்றும் உழவர் உற்பத்தி பெருக்கத் துறை அலுவலர் கீதா ஆகியோர் நேற்று ஆலத்தூர் வட்டம் இரூர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் டன் கணக்கில் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த வியாபாரிகள், பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

ஆய்வு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தது: தற்போது, பெரிய வெங்காயம் வெளிச்சந்தையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதனால், திருச்சியைச் சேர்ந்த வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை இங்கு இருப்பு வைத்துள்ளனர். இவற்றை பறிமுதல் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இங்கு இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சில்லறை விற்பனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்