திருப்பூர் மாநகரில் குப்பை அள்ளுவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக, மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "திருப்பூர் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல நாட்களாக குப்பை அள்ளப்படாததால், அப்பகுதியே குப்பை மேடாக காணப்படுகிறது. பாலித்தீன் உள்ளிட்ட பனியன் நிறுவனக் கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றன.
மழையால் குப்பையில் உள்ள கழிவுகளும் சாலைக்கு வந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினரும் முகம் சுழிக்கின்றனர்.
குப்பை அள்ளும் விஷயத்தில் மாநகராட்சி தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, வாரக்கணக்கில் குப்பை எடுக்காமல் இருப்பதால், அப்பகுதியையாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சமீபகாலமாக, குப்பைஅள்ளுவதில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கத்தையும், அலட்சியத்தையும் காட்டுகிறது. இதனால், பெரும் திண்டாட்டத்துக்கு மக்கள் ஆளாகின்றனர். மழைக்காலம் என்பதால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறது. இதனை ஒழிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago