கேரளாவுடனான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துக்கு தீர்வு முதல்வர் உறுதி அளித்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல்

By செய்திப்பிரிவு

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக கேரளாவுடன் விரைவில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டப் பணி, கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது முதல்வர் கே.பழனிசாமி பேசியதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: மேற்கு நோக்கிய மலைப்பகுதியில் ஓடுகின்ற பெரியாற்றின் உப நதிகளான ஆனைமலையாறு, நீராறு, சாலக்குடி ஆற்றின் உப நதிகளான சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் ஓடுகின்ற பாரதப்புழாவின் உப நதியான ஆழியாறு, பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரை முழு நேரம் பயன்படுத்தும் வகையில், கேரள அரசின் இசைவுடன் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் பாண்டியாறு - புன்னம்புழா பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமிழக - கேரள அரசுகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.

முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டப்பேரவைத் துணைதலைவர் ஆகியோர் நேரடியாக கேரளா சென்று அம்மாநில முதல்வரோடு கலந்து பேசி, இரண்டு மாநிலத்தில் இருக்கும் நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை முன்னேற்றத்தில் இருக்கிறது. விவசாயிகளின் எண்ணத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, ஆனைமலை ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 2 டிஎம்சி நீரை திருப்புவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு கேரள அரசு உடனடியாக முன்வர வேண்டும் எனவும், நீராறு - நல்லாறு திட்டத்தை தமிழகம் செயல்படுத்துவதற்கு கேரள அரசு இசைவு அளிக்க வேண்டும். இடமலையாறு திட்டத்தை கேரள அரசு நிறைவேற்ற வுள்ளதால், மேல் நீராறு அணை யிலிருந்து ஆண்டு முழுவதும் தமிழகத்துக்கு என நீரை திருப்பிக்கொள்ளும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவும், ஆனைமலையாறு திட்டம், நீராறு-நல்லாறு திட்டம் போன்றவற்றை செயல்படுத்தவும் இரண்டு மாநிலத்திலிருந்து 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி, இரண்டு மாநிலக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு டிச.12-ம் தேதி நடந்தது. இரண்டாவது கூட்டம் திருவனந்தபுரத்தில் செப். 11-ம் தேதி நடந்தது. விரைவில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை மூலமாக நல்ல தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் தெரிவி்க்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்