திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 12 திட்டப் பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர் பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் 9-வது வார்டில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்வசதியுடன் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி நிதியின்கீழ், 8-வது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மின்விசை மோட்டர் பொருத்தப்பட்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல், 10-வது வார்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரிவு-1ல், ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும், 10-வது வார்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரிவு-2ல் ரூ.8.36 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும், 3-வது வார்டு பகுதியில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 12 திட்டங்கள் மக்கள்பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
முன்னதாக, கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிரிஜா, அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் துரை வீரமணி, ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago