பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது தொடர்பாக சேலத்தில் 5 கல்வி மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.
சேலம் மற்றும் ஊரகம், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் நடந்த வழிகாட்டுதல் கூட்டத்துக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை வகித்தனர்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 600 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக வகுப்பாசிரியர்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளிப்பது, பெற்றோர்கள் முகக் கவசம் அணிந்து வரவும், கைகளை கிருமிநாசினி மூலம் கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். மேலும், பள்ளிக்கு வரும் பெற்றோர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருகையை பதிவு செய்து அவர்களின் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இறுதியில் பெற்றோர்களின் கருத்து, பள்ளி தலைமை ஆசிரியர்களின் கருத்துகள், தனியார் பள்ளிகளில் தாளாளரின் கருத்து, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கருத்து என அனைத்தையும் ஒருங்கிணைத்து கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago