நீலகிரி மாவட்டத்தில் அரசுமருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்படவேண்டும் என்ற மக்களின் நீண்டகால கனவு நிறைவேற்றப் பட்டுள்ளது என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
உதகையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின்பு முதல்வர் கூறியதாவது:
உதகை அரசு தலைமை மருத்துவமனை, சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு கட்டிட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு பகுதியில் ரூ.15.80 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தாயகம் திரும்பிய மக்களுக்கு முதல்வரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 46 ஆண்டுகளுக்குப் பின் கூடலூர் ஜென்மம் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு ரூ.15.70 கோடி மதிப்பீட்டில் 1,726 வீடுகள் மின் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக வன நிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்முதல்முறையாக 1,663 தனி நபர்களுக்கும், 111 இனங்கள் சமுதாய உரிமைகளுக்கும் 468 ஹெக்டேர் பரப்பளவு வன நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 37,500 சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ. 152 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உதகை நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்குகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குன்னூர் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடலூர் பகுதியில் ரூ. 204 கோடி மதிப்பீட்டில் 66/11 கேவி துணை மின்நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பழத்தோட்டம் ஆகியவை ரூ.10கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தேயிலைதொழிற்சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சாந்தி அ.ராமு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்..
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago