தமிழகத்தில் கறவை மாடுகளை தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது மடிவீக்க நோய். இதனால், பால் உற்பத்தி இழப்பு, பாலின் தரம் குறைதல், இனப்பெருக்க திறன் பாதிப்பு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றால், கறவை மாடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கருமுட்டை வெளியாதல், கரு உருவாதல், சினைப் பிடித்தல் போன்றஇனப்பெருக்க செயல்பாடுகள் தடைபட்டு, சினைப்பிடிக்கும் தன்மை குறைந்துவிடுகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, கால்நடை மருத்துவ அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சித்ரா ஆகியோர் கூறியதாவது:
பாக்டீரியா நுண்ணுயிர்கள், பூஞ்சைகள், ஆல்காக்கள் மூலமாக மடிவீக்கநோய் ஏற்படுகிறது. பாக்டீரியா நுண்ணுயிர்களில் ஈக்கோலை, ஸ்ட்ரெட்டோகாக்கஸ் மற்றும் ஸ்டைபைலோகாக்கஸ் போன்ற நுண்ணயிர்கள் கறவை மாடுகளில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 250-க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்களால், மடிவீக்க நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 2.14 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மடிவீக்க நோயால் அதிக அளவு பால் உற்பத்தி குறைவு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்துகிறது.
காப்பது எப்படி?
கறவை மாடுகளை வளர்ப்போர் மாட்டுத் தொழுவம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். மாட்டுத் தொழுவத்தின் தரையில் மேடு, பள்ளங்கள் மற்றும் கூர்மையான எந்தவொரு பொருட்களும் இருக்கக்கூடாது. பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். விரல்களில் நகங்களை நன்கு வெட்டி இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர்தீவனம் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும்.கறவை மாடுகளில் பால் காம்பின் நுனி சுருக்கு தசையால் இறுக்கமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். காம்பின் நுனியில் உள்ள துவாரம் பழைய நிலையை அடைய 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை மனிதர்கள், கன்றுகள் அருந்தக்கூடாது. இளம் கன்றுகள், பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை குடிக்கும்போது தீவிர இதய தசை அலர்ஜியால் இறந்துவிடும். பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை முழுவதும் கறந்து கிருமி நாசினி மருந்து கலந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago