திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை காலதாமதமின்றி தொடங்க சைமா கோரிக்கை

By செய்திப்பிரிவு

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடையவும், பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு தொழில்துறையினருடன் கலந்து ஆலோசிப்பதற்கும் தமிழக முதல்வருக்கு எங்களது பாராட்டுகள். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மாதந்தோறும் இ.எஸ்.ஐ.க்காக அதிகம் பங்களிப்பு செய்கிறது. திருப்பூர் நகருக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான அனுமதி வழங்கப்பட்டு, பிரதமர் அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்குவதில் காலதாமதமாகிறது. பின்னலாடைத் தொழிலாளர்கள் மருத்துவ வசதி பெற கோவை செல்ல வேண்டியுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ. மருத்துவமனை கோவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பொது மருத்துவம் பெற சிரமப்படுகிறார்கள். எனவே, திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் அதிகம் பஞ்சு கிடைப்பதால் நூல் உற்பத்தியையும், துணியாக மாற்றும் பின்னல் தொழிலையும் நன்கு ஊக்குவிக்கிறார்கள். மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், பல சலுகைகளை அறிவித்து பின்னலாடைத் துணிகள் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறார்கள்.

இதேபோல, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு, தொழிற்சாலை வகையில்தான் மின் இணைப்பு பெறுகிறோம். கட்டிங், தையல், செக்கிங், அயர்ன், பேக்கிங் போன்ற தொழில் மூலமாக, பலரின் பங்களிப்பால் மட்டுமே பின்னலாடை தொழில் முழுமையடைய முடியும். சில இடங்களில் கட்டிங் டேபிள் மட்டும் வைத்து மின்சாரம் மூலமாக அல்லது கையால் கத்தரி பயன்படுத்தி உற்பத்தி செய்து, செக்கிங், அயர்ன், பேக்கிங் போன்ற பணிகளை செய்கிறார்கள். அப்போது அங்கு வரும் மின்வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை மின் இணைப்பு வகைக்கு உட்படாது என்றும், வர்த்தக பயன்பாடு என்று கூறியும் அபராதம் விதிக்கிறார்கள். இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.பின்னலாடைத் தொழிலுடன் இணைந்த உப தொழில்கள் அனைத்தும் தொழிற்சாலை வகையில்தான் வரும் என்பதை, மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்