தேனியில் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகையை தவணை முறையில் வசூலிக்க துணை முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீர் இணைப்பு வைப்புக் கட்டணத்தை தவணை முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேனியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி யுள்ளார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கூட்டரங்கில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் பேசியதாவது:

தினமும் சுகாதாரமான குடிநீரை வழங்குதல், பள்ளி, அங்கன்வாடி, அனைத்து பொதுக் கட்டிடங்களுக்கும் குடிநீர் இணைப்பு, கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கான நிதியில் மத்திய, மாநில அரசுகள் தலா 45 சதவீதமும், சமூகப் பங்களிப்பு 10 சதவீதம் என்ற அடிப்படையிலும் இருக்கும்.

குடிநீர்க் குழாய் இணைப்பு களுக்கு வைப்புத்தொகை பெறும் போது அவர்களின் பொருளாதார நிலை மற்றும் கரோனா காலத்தை கருத்தில் கொண்டு தவணை முறையில் வைப்புத் தொகையைப் பெற்று முறையான ரசீது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ப.ரவீந்திரநாத் எம்பி, எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்