டெல்டாவில் ஒரு மாதத்துக்குள் 4 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்தது வரலாற்று சாதனை அமைச்சர் ஆர்.காமராஜ் கருத்து

By செய்திப்பிரிவு

டெல்டாவில் ஒரு மாதத்துக்குள் 4 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஒரு வரலாற்று சாதனை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தனி நிதியம் ஒன்றை அமைத்து ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே அரசு தமிழக அரசு. அதனடிப்படையில் வெங்காயத்தை இறக்குமதி செய்து கிலோ ரூ.45-க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது, இது சட்ட ரீதியான நடவடிக்கை என தமிழக முதல்வர் தெளிவாக தெரிவித்துவிட்டார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி தொடங்கி இருக்கிறார். அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நடிகர் விஜய் கூறுகிறார். இது, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்சினை, அதில் நாம் தலையிட முடியாது.

கஜா புயலில் வீடு இழந்தவர்களுக்காக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. யாரெல்லாம் பட்டா வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தகுந்த இடங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் தொடர் நடவடிக்கையில் உள்ளது. டெல்டாவில் அக்டோபர் மாத தொடக்கம் முதல் தற்போது வரை 4 லட்சத்து 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் 4 லட்சம் டன் நெல் எந்த ஆண்டிலும் கொள்முதல் செய்தது கிடையாது.

இது ஒரு வரலாற்று சாதனை. டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்