சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை

By செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2017-ம் ஆண்டு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ்(68) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர் இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் சட்டவிரோதமாக வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியிருந்ததாகவும், பின்னர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்றுவிட்டு, கடைசியாக ஏர்வாடி பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திச் செல்ல தமிழகத்துக்கு வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அவரை சென்னை புழல் சிறையில் போலீஸார் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், முகமது யூனுஸுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்