தொடர் மழையால் போச்சம்பள்ளி பகுதியில் தென்னங்கன்றுகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, இருமத்தூர், பண்ணந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா,அஸ்ஸாம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் 25 லட்சத்துக்கும் அதிகமான தென்னங்கன்றுகள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இதற்காக இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தரமான விதை தேங்காய்கள் பதியம் போடப்படுகின்றன. ஒரு வருடத்துக்குக் குறையாமல், 3 அடி வரை தென்னங்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஒரு தென்னங்கன்று தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கரோனா முழு ஊரடங்கின் போது தென்னங் கன்றுகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்தன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை, தென்னங்கன்றுகள் விற்பனை குறைவாக இருந்தது. கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த நல்ல மழையால், தற்போது தென்னங்கன்றுகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி, விலையும் உயர்ந்துள்ளதாக தென்னங்கன்று வளர்ப்போர் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘வழக்கமாக தென்னங்கன்றுகள் சராசரியாக தரத்தை பொறுத்து ரூ.35 வரை விற்பனையாகும். ஆனால் ஊரடங்கில் தளர்வு அளித்த பின்னரும், ரூ.25-க்கு மேல் விலை வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை இருந்ததால், இழப்பினை சந்தித்து வந்தோம். இந்நிலையில் தற்போது, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் தென்னங்கன்று விற்பனை அதிகரித்துள்ளது.
விலையும் ரூ.50 முதல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. போதிய வருவாய் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது,’’ என்றனர். விவசாயிகள் கூறும்போது, ‘‘ஏற்கெனவே வறட்சியால் காய்ந்து போயிருந்த தென்னைமரங்களுக்கு மாற்றாக புதிய தென்னங்கன்றுகள் வைக்க முடிவு செய்தோம்.
தற்போது பெய்த மழையால் நிலத்தில் ஈரத்தன்மை உள்ளது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையில் தண்ணீர் கிடைக்கும் என்பதால் தென்னங்கன்றுகள் நடவு செய்து வருகிறோம்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago