பெரம்பலுரில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழை மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் மிக அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி, படைப்புழு தாக்குதல் போன்ற பேரிடர்களால் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நிகழாண்டு ஆடி மாதம் போதிய மழை பெய்ததால், மிக அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. கோடைகாலம் போல வெயில் சுட்டெரித்தது. இதனால் தற்போது கதிர் பிடித்துள்ள நிலையில் காணப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் போதிய மழை இல்லாமல் கருக ஆரம்பித்தன. இதைக்கண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்றும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இந்த மழை மக்காச்சோளம் பயிர் கதிர் பிடிக்கவும், செழித்து வளரவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரவக்குறிச்சியில்...

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, அணைப்பாளையம், குளித்தலை, கரூர், பஞ்சப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 50, அணைப்பாளையம் 15, குளித்தலை 9, கரூர், பஞ்சப்பட்டி 3.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE