வட மாநிலங்களுக்கு ஜவுளி ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகள் இன்று (5-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றுவதில்லை என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறியதாவது:
கோவை, சோமனூர்,பல்லடம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் 200 லாரிகளில் ஜவுளிகள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது, புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதிக உயரத்துக்கு ஜவுளி லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு,வட மாநிலங்களில் அதிக அபராதம் விதிக்கின்றனர்.
எனவே, 3 நாட்களுக்கு ஜவுளி லோடுகளை லாரியில் ஏற்றுவதில்லை என லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக, ஜவுளிலோடு புக்கிங் செய்யும் டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் முகவர்கள் அரசு நிர்ணயித்தபடி 3.8 மீட்டர் உயரம், 2.6 மீ அகலம், 12 மீ நீளம் என்ற அளவுக்கு ஜவுளி லோடுகளை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த அடையாள போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் இருந்து தினமும் 50 லாரிகளில், ஜவுளி லோடு வட மாநிலங் களுக்குக் கொண்டு செல்லப் படும். நாளொன்றுக்குசுமார் ரூ.1 கோடி மதிப்புடைய ஜவுளிகள் சேலத்தில் இருந்து மட்டும் அனுப்பப்படும். இதேபோல, கோவை, திருப்பூர், பல்லடம், சோமனூர் என மற்ற இடங்களிலும் இருந்து தினமும் 200 லோடு ஜவுளி வட மாநிலங்களுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில், நிர்ணயித்த உயரம், எடைக்குக் கூடுதலாக ஜவுளி லோடு எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்கவும், வட மாநில ஜவுளி வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இன்று முதல் 3 நாட்கள் போராட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago