திருப்பூருக்கு 6-ம் தேதி முதல்வர் வருகை ஆட்சியர் அலுவலக தூய்மைப் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 6-ம் தேதி திருப்பூர் வருவதையொட்டி, ஆட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு புதிய பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். கரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 6-ம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்திலுள்ள அறைகளின் முன்பகுதி, கூட்டரங்கத்தின் வெளிப் பகுதிகளில் சுண்ணாம்பு அடித்து தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முதல்வர் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, கரோனா பரிசோதனை நடத்துவது தொடர்பான பணிகளில் மருத்துவத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எம்.பி.-க்கு தகவல் இல்லை

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.ரவி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் வருவது தொடர்பாகவும், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எந்தவித தகவலோ, அழைப்பி தழோ இதுவரை திருப்பூர் மக்களவைதொகுதி உறுப்பினரான சுப்பராயனுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், மக்களவை உறுப்பினருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வழியாக கேட்கிறார்கள். முதல்வர் வரும் தகவல் குறித்து எந்த விவரமும் தெரிவிக்காமல், நேரடியாக கரோனா பரிசோதனைக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்