திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சேக் இம்ரான் (20), சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர், தன் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாலை புல்லரம்பாக்கம் - காந்திநகர் பகுதியில் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்குச் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தார். அப்போது, சேக்இம்ரானும், பிரவீன்குமாரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் பிரவீன்குமார் மட்டும் தப்பினார்.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர், சேக்இம்ரானை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், நேற்று காலை மறுபடியும் தேடும் பணியில் ஈடுபட்டனர். புல்லரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள ஈக்காடு பகுதியில் சேக் இம்ரானை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக, புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயின் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என, ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago