மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் ஆணையங்களாக மாற்றம்ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காணலாம்

By ரெ.ஜாய்சன்

மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றங்கள் நுகர்வோர் ஆணையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும்வழக்குகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நுகர்வோர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன்கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெறலாம்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனுத் தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது. இதில், இழப்பீடு கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள் மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன.

நுகர்வோர் ஆணையமாக மாற்றம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லதுமேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும். இந்நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்கள், மாவட்ட நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது:

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் மாவட்ட அளவிலேயே ரூ.1 கோடி வரை நிவாரணத்தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. அதேபோல, மாநில ஆணையத்தில் ரூ.10 கோடி வரை நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காணலாம்.

ரூ.10 கோடிக்கு மேல் நிவாரணத்தொகை இருந்தால் மட்டுமே தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாட வேண்டியிருக்கும். இதன் மூலம் மாநில ஆணையம், தேசியநுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதோடு, நுகர்வோரும் அதிக தொகைக்காக மட்டுமேமேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரூ.5 லட்சம் வரை நிவாரணம் கோரும் வழக்குகளுக்கு நீதி மன்றக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள வழக்குகளுக்கு ரூ.200-ம், ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை உள்ள வழக்குகளுக்கு ரூ.400-ம், ரூ.20 லட்சம்முதல் ரூ.50 லட்சம் வரை உள்ள வழக்குகளுக்கு ரூ.1000-ம், ரூ.50 முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகளுக்கு ரூ.2000- ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

முன்பு எந்தப் பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளைத் தயாரித்த அல்லது விற்பனை செய்த நிறுவனம் எங்கு உள்ளதோ அங்குள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மட்டுமே வழக்குத் தொடர முடியும்.

ஆனால் தற்போது, நாம் எங்கு பொருள் வாங்கினாலும், நாம் வசிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடரலாம்.

உதாரணமாக, தூத்துக்குடியில் வசிக்கும் ஒருவர் சென்னையில் உள்ள கடையில் ஏதேனும் பொருள் வாங்கி அதில் குறைபாடுஏற்பட்டால், அவர் தூத்துக்குடியில் உள்ள நுகர்வோர் ஆணையத்திலேயே வழக்குத் தொடரலாம்.

நுகர்வோர் ஆணையம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அந்தந்த மாவட்டங்களில் நுகர்வோர் சமரச தீர்வு மையம்அமைக்கப்பட வேண்டும். சிறு,சிறுவழக்குகளுக்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் பொது மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படும். வழக்குகளில் விரைவில் இழப்பீடுகிடைக்கும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்