அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் 6 நாட்களுக்குப் பின் நிறைவடைந்தது

By செய்திப்பிரிவு

விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான உயர்மின் வழித்தடத் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஊத்துக்குளி, தாராபுரத்தில் விவசாயிகள் கூட்டியக்கத்தினர் மேற்கொண்ட தொடர் காத்திருப்புப் போராட்டம், 6 நாட்களுக்குப்பின் நேற்று நிறைவுபெற்றது.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் விருதுநகர் முதல் திருப்பூர் வரை 765 கிலோ வாட் உயர்மின் வழித்தடம்அமைக்கப்படுகிறது.

இதற்காக விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படு வார்கள் எனக்கூறி பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்திட்டப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும், காவுத்தம்பாளையத்தில் ஏரி ஆயக்கட்டு நிலத்தில் துணைமின் நிலையம் அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஊத்துக்குளி மற்றும் தாராபுரத்தில் கடந்த 28-ம்தேதி தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

நேற்று 6-ம் நாளாக இரு இடங்களிலும் போராட்டம் தொடர்ந்தது.

இதுதொடர்பாக திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கோட்டாட்சியர் ஜெகநாதன், தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், விவசாயிகள் கூட்டியக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்.குமார், ஈசன், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடுஏற்பட்டதால், காத்திருப்புப் போராட்டம் முடித்துக் கொள்ளப் படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டியக்க நிர்வாகியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளருமான ஆர்.குமார் கூறும்போது, ‘‘கூட்டியக்க விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை மாவட்ட நிர்வாகத்தால் திட்டத்துக்கு முன்நுழைவு அனுமதி வழங்கப்படாது என்றும், நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து அடுத்தகட்டமாக முடிவெடுக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதால் போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்