சேலம் மூக்கனேரியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் மூக்கனேரி கடந்த சில ஆண்டாக தண்ணீர் நிரம்பி, இயற்கை எழிலுடன் காட்சி அளித்து வருகிறது. ஏரியின் நடுவே மணல் குன்றுகளில் மரங்கள் உள்ளதால், பறவையினங்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்போது, தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி கடல்போல காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், ஏரியில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து ஆக்கிர மித்துள்ளதால், நீர் மாசுபாடும், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, ஆகாயத் தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மூக்கனேரி விவசாயிகள் சங்க செயலாளர் குருமூர்த்தி கூறியதாவது:
சேலம் மூக்கனேரி 58 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முக்கிய நீர்நிலையாகும். இந்த ஏரி மூலம் ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 91-ம் ஆண்டு பாசன வாய்க்கால்களை மூடினர். மேலும், தெற்கு பகுதியில் மூன்று மதகுகளை காங்கிரீட் கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறாத வகையில் மூடிவிட்டனர்.
இதனால், நிலங்கள் பாசன வசதியின்றி மனைப் பிரிவுகளாக மாறி வருகிறது. தற்போது, ஏரியில் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர பெரும் தடையாக இருப்பதோடு, நீர் மாசுபாடு அதிகரித்துள்ளது. மேலும், மீன் வளம் குறையும் நிலையுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகாயத் தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago