விவசாய கடன் தவணைக்கான கூட்டு வட்டியை ரத்து செய்ய கோரிக்கை

கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், கட்டத் தவறிய விவசாய கடன் தவணைக்கான கூட்டு வட்டியை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளது:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, வங்கிகளில் பெற்ற கடன் தவணைகளை செலுத்துவதை மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு தள்ளிவைத்தது. இந்த ஒத்திவைப்பு கடன் தவணைகள் காலங்கடந்த, தவறிய தவணைகள் எனக் கூறி, ரிசர்வ் வங்கி கூட்டு வட்டி விதித்து உத்தரவிட்டது. அதன்படி, வங்கிகள் வசூல் செய்து வருகின்றன.

இந்நிலையில், கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்த கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யவும், கூட்டு வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதன் பின்னர் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் வேளாண்மை சார்ந்த பயிர்க் கடன், டிராக்டர் கடன் மற்றும் பிற விவசாய கடன்களின் தவறிய தவணைகளுக்கு கூட்டு (கூடுதல்) வட்டி வசூலிக்கப்படும் என்றும், மத்திய அரசின் வட்டிச் சலுகையில் விவசாயிகள் பயன் பெற முடியாது எனவும் அறிவித்திருப்பது சரியல்ல. கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து வேளாண் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள் மகசூலை பாதுகாத்து இருக்கிறார்கள் என வல்லுநர்கள் பாராட்டி வரும்வேளையில், விவசாயி களுக்கும் வட்டி சலுகை கொடுத்திருக்க வேண்டும். மேலும் நுகர்வோர் கடன், வாகன கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன் ஆகியவற்றுக்கு ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கி இருக்கும்போது, விவசாயிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது. எனவே, விவசாயிகள் பெற்றிருக்கிற கடன்களுக்கும் இந்த சலுகையை விரிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE