ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திருப்பத்தூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சவுடே குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர், திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பொம்மிக்குப்பம் ஊராட்சி செயலாளராக முத்துக்குமரன் கடந்த சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பொம்மிக்குப்பம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த பிரகாசம் என்பவர் தாதனவலசைக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.

இதையடுத்து, நேற்று பொம்மிக்குப்பம் ஊராட்சி செயலாளராக முத்துக் குமரன் பொறுப்பேற்க இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பொம்மிகுப்பம் கிராம மக்கள் ஏழருவி - திருப்பத்தூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி, திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரனை முற்றுகையிட்ட பொதுமக்கள், தாதனவலசை ஊராட்சி செயலாளராக முத்துக்குமரன் அங்கு பணி யாற்றியபோது அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பொம்மிக்குப்பம் ஊராட்சி செயலாளராக அவரை நியமித்தால் மேலும் பல்வேறு முறைகேடுகள் நிகழ நேரிடும்.எனவே, அவரை இங்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது.

முறைகேட்டில் ஈடுபடாத, இதுவரை பொம்மிக்குப்பம் ஊராட்சியில் பணியாற்றாத புதிய ஊராட்சி செயலாளரை இங்கு நியமிக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே பணியாற்றி வந்த பிரகாசத்தை தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட வேண்டும்" எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களை சமாதானம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், "இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு தெரிவிக்கப்படும்" என்றார்.

இதனையேற்காத பொதுமக்கள் மறியலை தொடர்ந்தனர். இதனால், அங்கு ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியில் காவல் துறையினர் மறியல் போராட்டத்தை கைவிடா விட்டால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்