ஆழ்துளை கிணறு அமைக்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டு நிம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஆழ்துளைக் கிணறு அமைக்க தனிநபரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊராட்சி செயலாளரை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜீவஜோதி (40). இந்நிலையில், நிம்மியம்பட்டு ஊராட்சியில் தனிநபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தார்.

அரசு விதிமீறி அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிம்மியம்பட்டு ஊராட்சி பொறுப்பாளர் வைரமுத்து (44) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர் அலுவலகத்துக்கு சென்று, தனிநபர் ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.10 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. பின்னர், ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி தனது உறவினர்களுடன் சென்று வைரமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்து மாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில், தனி நபர் ஆழ்துளைக் கிணறு அமைக்க பணம் பெற்றது தெரியவந்தது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்

நிம்மியம்பட்டு ஊராட்சியில் அரசு விதிமீறி அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்