திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித் திரிவதால், அவற்றை பாதுகாக்க வனத் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு அருகே பொதுப்பணித் துறை பராமரிப்பில் அலாபாத் ஏரி அமைந்துள்ளது. நத்தப்பேட்டை ஏரி மற்றும் மஞ்சள்நீர் கால்வாயின் உபரிநீர், அலாபாத் ஏரிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் மஞ்சள்நீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியதால் அலாபாத் ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை.
மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும். இந்நிலையில், ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்த்தியாக காணப்படுகின்றன. இந்த ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளி மான்கள் சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். தற்போது, அவை இனப்பெருக்கம் செய்து ஏராளமான மான் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. ஏரியின் உள்ளே இயற்கை சூழலில் வாழ்ந்து குட்டிகளுடன் சுற்றித்திரியும் மான்களை, பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், சமூக விரோதிகளால் மான்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காகவும் மான் கூட்டம் தொடர்ந்து பாதுகாப்புடன் இயற்கை சூழலில் ஏரியில் வசிப்பதற்காகவும், வனத் துறையினர் ஏரிக்கரை பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் இளங்குமரன் கூறும்போது, "மான்கள் தங்களின் புகலிடத்தை எளிதாக தேர்வு செய்யாது. இந்நிலையில், நகரில் உள்ள ஏரியில் இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் மான்கள் உலா வருவது மிகுந்த அரிதான ஒன்று. மேலும், ஏரியின் இயற்கை சூழலும் இதற்கு காரணம். ஆனால், ஏரிக்கரை தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால், மான்களின் வாழ்விடம் சுருங்கி மான்கூட்டம் வெளியேறும் நிலை ஏற்படும். எனவே, வனவிலங்கு வாழ்விடப் பகுதி என்பதை விளக்கும் வகையில் மான்களின் ஓவியம் அடங்கிய பலகைகள் அமைத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, "மான் கூட்டத்துக்கு இடையூறு மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஏரிக்கரைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கரைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து விழிப்புணர்வு பலகைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவதற்கு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago