கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை பணம் உடனடியாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் ஊற்றி வரும் நிலையில் 11 வாரங்களாக பால் கொள்முதல் கட்டணத்தை, உற்பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை. இதற்கு ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவது ஒரு காரணம் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியங்கள் பிரிக்கப்படாமல் இருந்த போது ரூ.110 கோடி கடனில் சென்று கொண்டிருந்தது. இந்த ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்பட்ட போது இந்த கடனில் சரி பாதி தருமபுரிக்கு பிரித்து அளித்திருக்க வேண்டும். அதிகளவில் ஊதியம் பெறு வோரை, தருமபுரிக்கு பணியிட மாற்றம் செய்யாமல், குறைந்த அளவு ஊதியம் பெறுவோர் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனால் மாதம் ரூ.30 லட்சம் வரை, கூடுதல் இழப்பை கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுபால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சந்திக்கிறது. மாதம் ரூ.1.25 கோடி வரை செலவுக் கணக்கில் காட்டப்படுகிறது. மேலும்,கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பதன் மூலமாக, நிர்வாக செலவுகள் போக மாதம் ரூ.3 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், வருவாய்தொகை என்னவாகிறது எனத் தெரியவில்லை.

அன்றாடம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் அல்லல்படும் விவசாயிகளுக்கு பால் பணம் வழங்காமல் இருப்பதைதமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. இந்த தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்