திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, "குன்னத்தூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் சாலை பழுதடைந்து பல வாரங்களாகிவிட்டன.
நான்கு புற சாலைகளில் இருந்து வரும் வாகனங்களும் சந்திக்கும் பகுதி என்பதால், எப்போதும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் தொடங்கி, விவசாய தோட்டப் பணிக்கு வேலைக்கு செல்பவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலை பழுதடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அடிக்கடி வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மழை பெய்யும்போது குழியான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
குன்னத்தூர் நகரின் பிரதான சாலையே இப்படி இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக சாலையை சீரமைக்க குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ் சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
ஊத்துக்குளி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சுகுமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "கொடிவேரி குடிநீர் திட்டத்துக்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றதால், பேருந்து நிலையம் அருகே சாலை குழியாக உள்ளது. தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காகவும் குழாய் பதிக்க வேண்டிய பணிகளும் உள்ளன. மேற்கண்ட பணிகள் முடிந்ததும் சாலை சீரமைக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago