கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்க புதிய திட்டம் ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி பரிந்துரை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக் தெரிவித்துள்ளார்.

சென்னை - சேலம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை மற்றும் கள்ளக்குறிச்சி நகர்களை ஒட்டிச் செல்லும் புறவழிச்சாலை இருவழிப் பாதைகளாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த 2020 அக்டோபர் மாதம்வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 126 பேர் இறந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டும் 153 பேர் இறந்துள்ளனர். அதேபோன்று கடந்த 10 மாதங்களில் உயிரிழப்பு இல்லாத 447 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த 6 மாதங்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், போக்குவரத்து இயக்கம் பெருமளவு குறைந்தி ருந்ததே இதற்கு காரணம் என போக்குவரத்துப் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பாக பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக், “ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தினந்தோறும் 50 போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபடுகிறோம். சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகிறோம்.

மாவட்டத்தில் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக உளுந்தூர்பேட்டை - சின்னசேலம், எடைக்கல் - திருச்சி ஆகிய வழித்தடங்களில் பெருமளவு விபத்துகள் நிகழ்கின்றன. இதுபோன்ற இடங்களில் பொறியியல் துறை மூலம் ஆய்வு செய்து, வளைவுகளை முறையாக அமைப்பது, சாலை தடுப்புகள், வேகத்தடைகள், உயர் மின்விளக்கு கோபுரம், தானியங்கி திசைகாட்டும் கருவி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடி மதிப்பிடப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்