காரைக்காலில் பிரெஞ்சு கட்டிடக் கலை அம்சத்துடன் 1852-ம் ஆண்டு கட்டப்பட்ட நேரு மார்க்கெட் வளா கம் சிதிலமடைந்ததால், அதை இடித்துவிட்டு பழமை மாறாமல் புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே வாரச் சந்தை இருந்த இடத்தில் தற்காலிகமாக நேரு மார்க்கெட் அமைக்கப்பட்டு, கடைகள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
தொடர்ந்து, உலக வங்கியின் கடலோர பேரிடர் இடர் குறைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.11.86 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, புதிய நேரு மார்க்கெட் வளாகத்தை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கடந்த 16-ம் தேதி திறந்து வைத்தார். அப்போது, “காலதாமதம் இல்லாமல் உடனடியாக உரிய வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இதுவரை நேரு மார்க்கெட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வில்லை.
புதிதாக கட்டப்பட்டுள்ள நேரு மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நேரு மார்க்கெட் செயல்பட்டு வரும் இடத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லை. இதனால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், புதிய நேரு மார்க்கெட் வளாகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து நேரு மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.எம்.செல்லப்பா கூறியது: ஏற்கெனவே இருந்த நேரு மார்க்கெட் வளாகத்தில் 117 கடைகள், 42 தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், புதிய மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும். புதிதாகக் கட்டப்பட்டுள்ள வளாகத் தில் என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து வியாபாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன்படி உரிய வசதிகளை செய்துகொடுத்து, விரைவாக கடைகளை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் கூறியது: புதிய நேரு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. வெவ்வேறு அளவிலான கடைகளுக்கு புதிதாக வாடகை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே மின் கட்டணம் வசூலிக்கப்பட்ட முறை அல்லாமல், தற்போது மாதாந்திரக் கட்டணமாக செலுத்தும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. வியாபாரிகள் தரைக் கடைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் மிக விரைவாக முடிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago