வேளாண் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் ராட்டை மற்றும் ஏர் கலப்பையுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி, மதிமுக கூடூர் சீனிவாசன், விசிக மாவட்டச் செயலாளர்கள் வடிவழகன், வி.த.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் முன்னிலை வகித்தார்.

கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் கைவிட வலியுறுத்தி, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு, வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.ஸ்வந்த் சாகர், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூரில்...

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். கரூர் எம்.பி செ.ஜோதிமணி, நகரத் தலைவர்கள் பெரியசாமி, ஸ்டீபன்பாபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்