வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம், கைது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி, திருநெல்வேலி, தெ்ன்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதாக மத்திய பாஜக அரசின் சட்டங்களைக் கண்டித்தும், அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் உழவர் உரிமையைக் காக்கும் சத்தியாகிரக போராட்டம் என்ற பெயரில் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை அக்கட்சித் தலைமை அறிவித்தது.

அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவிடி சிக்னல் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் விவிடி சிக்னல் அருகே நேற்று காலை திரண்டனர்.

போலீஸார் அவர்களை தடுத்ததையடுத்து தரையில் அமர்ந்து தர்ணா செய்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதையடுத்து 10 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்து, பிரையண்ட் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு மாலை 4 மணி வரை அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் மேலிடப் பார்வையாளர் டாக்டர் பீனுலால், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பெருமாள்சாமி, மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர், மகளிர் காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்னபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஏரலில் போராட்டம் நடத்திய காங்கிரஸார் 17 பேரும், திருச்செந்தூரில் 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏராளமான காங்கிரஸார் திரண்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீஸார், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி, போராட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸாரை கைது செய்தனர். போலீஸாருடன் காங்கிரஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கொடிகளையும் போலீஸார் அகற்றினர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தை முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் வானமாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ரெட்டியார்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில், புதுக்கடை ஆகிய இடங்களில் காங்கிஸார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன் நடந்த போராட்டத் துக்கு,கட்சியின் மாவட்டத் தலைவர் ராதாகிரு ஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் அசோகன் சாலமன், ராபர்ட்புரூஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கடையில் நடந்த போராட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்